Sunday 26 April 2020

கூகை


உலக புத்தக தினம் : ஏப்ரல் 23 /04 /2020 .

கூகை

எழுத்தாளர்: சோ.தர்மன்
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள்:319
விலை: ரூ.240
மூன்றாம் பாதிப்பு: டிசம்பர்-2011




"கூகையை இரவில் யாராலும் பிடிக்க முடியாது . சூரியனைக் கண்ணாக்கிக்கொண்டு இரவில் மட்டுமே தலைகாட்டும் பறவையிது. சூரியனே கண்ணாக இருப்பதால் சாமானியமாக யாரும் கிட்டத்தில் நெருங்கிவிட முடியாது. பச்சைப்பிள்ளை கூட பகலில் கூகையைப் பிடித்துவிடலாம். ஏனெனில் இந்த அண்டத்திற்கே ஒளி வழங்கும் சூரியக்கண்ணை பகலில் கடனாக கொடுத்துவிடும். இரவில் இரைதேட வாங்கிக் கொள்ளும்".

சோ.தர்மன்




சோ . தர்மனின்  “கூகை”  நாவலுக்குள் நுழையும் முன்பு  உங்களை ஒரு சாதியற்ற  மனிதனாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அப்படியில்லையென்றால் இந்த நாவல் வெளிக்கொணரும் உண்மைகளை உங்களால் உணர முடியாமல் போய்விடும்.


வாருங்கள் ... கூகையின் குகைக்குள்ளே செல்வோம்!


சித்திரம்பட்டி என்ற அழகான கிராமத்தைக் களமாக கொண்டு இந்த நாவல் பேசுகிறது. பல சாதியினர்  , குறிப்பாக நாயக்கர், தேவர், ரெட்டியார் , பிள்ளைமார் , பள்ளர்  , பறையர்  சக்கிலியர்   மற்றும் பிராமணர்  என்று பலர்  வாழும் கிராமம் இது.  

சீனிக்குடும்பன் பள்ளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறான். அவனுக்கு " கூகை " வழிபடும் குலதெய்வமாக இருக்கிறது. ஆனாலும் பள்ளக்குடி எல்லாமே கூகையை வணங்குகிறது.

சித்திரம்பட்டியில் காலமெல்லாம்  நிலமற்றவர்களாகவும் , பண்ணை அடிமைகளாகவும் வாழும் பள்ளர்கள் விவசாயத்தையே முழுமையாக சார்ந்து விவசாயக் கூலிகளாக  வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தனது குத்தகைக்குத் தருகிறார் நடராஜ அய்யர். அதனால் பள்ளர்கள் விவசாயம் செய்து  முன்னேறுகிறார்கள்.


சித்திரம்பட்டி, நாகம்பட்டி ஜாமீனுக்குள் உள்ளடங்கிய ஒரு கிராமம் . முத்தையாபாண்டியன் அக்கிராமத்தின் காவலாளியாக ஜமீன்தாரால் நியமிக்கப்பட்டவன். பெரும் பெண்பித்தன் . கிராமத்தில் உள்ள  பறையர் மற்றும் சக்கிலிய குடி பெண்களை சீரழிப்பதையே வேலையாக கொண்டவன். பள்ளர்களின் வளர்ச்சியைப் பொறுக்காத இவன் ஜமீன்தார் மூலமாக இடைஞ்சல் தருகிறான்.

சண்முகம் பகடையின் மனைவி கருப்பியை அவனே நிரந்தரமாக வைத்துக் கொள்கிறான். அதுமட்டுமல்லாமல் அவர்களது பதினான்கு வயது மகள் வெள்ளையம்மாளையும் (அவனுக்கு பிறந்த குழந்தையே) சீரழிக்க முயலும் போது வெகுண்டெழுந்த சண்முகம் , முத்தையா பாண்டியனை கொலை செய்கிறான். அதனால் சக்கிலியக்குடிகள் சித்திரம்பட்டி கிராமத்தைக் காலி செய்து வெளியேறுகிறது

அதே போல் பள்ளர் சாதியைச் சேர்ந்த அப்புசுப்பன்  அக்கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து முன்னேற ஆரம்பிக்கிறான்  , ஆதிக்க சாதியைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி தொல்லை கொடுப்பதால் அவனை கொலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் அப்பு சுப்பனும் , அவன் மகன் அய்யனாரும் சித்திரம்பட்டி கிராமத்தைவிட்டு விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்படுகிறது. பின்னர் போலீஸ் கிராமத்திற்குள் நுழைகிறது ; பள்ளக்குடி சூறையாடப்படுகிறது. 

போலீஸ் அப்புசுப்பனைப் பிடிக்க அவன் மனைவியை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துகிறது தாயை நிர்வாணப்படுத்திய போலீஸ் ஏட்டின் தலையை துண்டிக்கிறான் அய்யனார். அதனால் , அப்புசுப்பனும், அய்யனாரும் மீண்டும் தலை மறைவாகிறார்கள்.

இதற்கிடையில் , கிறித்துவம் ஊருக்குள் நுழைகிறது . பறையக்குடியை பிடித்துக் கொள்கிறது . கிட்ணசாம்பான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறான். அவன் மதம் மாறி “பேதுரு”  என்று பெயர் மாறுகிறான். அங்கே ஒரு சர்ச் உருவாகிறது. அவர்களது சப்பரத் திருவிழாவின் போது அவர்களது தேர் பள்ளக்குடி வழியாக செல்கிறது . வெடி வெடிக்கப்படுகிறது. அதன் வழியாக சண்டை உருவாகிறது. பறையக்குடி தீ வைத்து கொளுத்தப்படுகிறது. பேதுரு வெட்டிக் கொல்லப்படுகிறான்.  பறையர்கள்  சித்திரம்பட்டியை விட்டு வெளியேறுகிறார்கள்.

இவ்வாறு சித்திரம்பட்டி தமது அமைதியை இழக்கிறது.

நாளடைவில் கூகையை வழிபட்ட பள்ளக்குடிகளுக்கு அலுப்புத்தட்டி விடுகிறது. ஆகவே , கோபக்கார  புதிய கடவுள் "காளியம்மாளை" வணங்க முற்படுகிறார்கள். அதனால் சித்திரம்பட்டியில் உள்ள கூகைச்சாமி கோவிலை இடித்து விட்டு " காளியம்மன்" கோவில் கட்ட முடிவெடுக்கிறார்கள். மனம் வெறுத்துப்போன சீனிக்கிழவன் கூகைச் சாமியை தூக்கு கொண்டு இரவோடு இரவாக சித்திரம்பட்டியை விட்டு வெளியேறுகிறான்.

இதனைத் தொடர்ந்து போலீசில் இருந்து தப்பிக்க வெளியேறிய அப்புசுப்பன் அழகனேரி முத்துப்பேச்சியிடம் அடைக்கலம் அடைகிறான். இங்கே முத்துப்பேச்சி -காளிதேவரின் துயரமான சோக வரலாறும் வருகிறது.  . பள்ளர் சாதியை சேர்ந்த முத்துப்பேச்சியை ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான காளிதேவர் மணப்பதும் , அதனால் அவர்களது வாழ்வு திசைமாறுவதும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது .

இறுதியில் சித்திரம்பட்டியிலிருந்து வெளியேறிய பள்ள, பறைய மற்றும் சக்கிலியக்குடிகள் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் மீண்டும் ஒன்று சேருகிறார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் ஜமீன்தாரின் மில்லிலும், கல்குவாரிகளிலும் மீண்டும் அடிமையாகிறார்கள். 

இதுவே " கூகையின் " சுருக்கமான சாரம்.


சோ.தர்மன் இந்த நாவலில் கையாண்டிருக்கும் களமும்,  யுக்தியும்  மற்றும் உரையாடலும் மிகவும் பிரமிக்க வைக்கிறது. கிராமத்து  காமத்தைக் கலைநுட்பத்தோடு சொல்லும் அவரது லாவகம் ஈர்ப்புடன் இருக்கிறது.

நாவல் தரும் சுவாரசியங்கள்:

Ø  பள்ளக்குடியை சேர்ந்த மக்கள் பிற சாதியினரின் வீடுகளுக்கு பதிவாளாக (கொத்தடிமையாக) வேலை செய்கிறார்கள். சீனிக்கிழவனின் மனைவி சின்னக்காளி கங்கையா நாயக்கருக்கு உரியவளாக இருப்பாள். சின்னக்காளி , கங்கையாநாயக்கரை தாலி காட்டாத கணவனாகவே வரித்துக் கொள்கிறாள். அதேபோல்,  லிங்கையா நாயக்கரிடம்  சீனி பதிவாளாய் வேலை செய்கிறான் .  அவர் மனைவி பத்ரராஜம்மாள். லிங்கையா நாயக்கருக்கு குஷ்டரோகம் ; அழுகல் நோய். அவர்களுக்கு ஏழு வருசமாக குழந்தை இல்லை. சீனிதான் அவரை குளிப்பாட்டி கவனித்துக் கொள்வான்.  பத்ரராஜம்மாள் என்ற கிளி அழுகல் பழத்தை சாப்பிடுமா?. பத்ரராஜம்மாள் என்ற கனியை சீனி தான் தின்றான். தீண்டப்படாத கனியை ஏவாள் தின்றாள். கனி தித்தித்தது. இதை பார்த்து விட்ட லிங்கையா நாயக்கர் காலையில் செத்துக் கிடந்தார்.

Ø  கீழக்கடைசி வீட்டுக் குருவம்மாளிடம் படுத்து எந்திரிச்சு காளிப்பரெட்டி போவார். அவள் புருசன் கண்டாங்கியை மூடிக்கொண்டு ஆட்டுத்  தொழுவில் படுத்திருப்பான்.  ஆட்டுக் கொச்சையின் கவுச்சி வாடையில் குருவன் சுணைமாறிப்போய் வீட்டில் படுப்பதே இல்லை. உரோமக் கத்தையின் கதகதப்பில் துயிலுறங்கும் குருவன் துள்ளியெழுந்தா போவான்?. சினையாற்றின் முனகலென ச் சில சமயம் பிதற்றுவான்; பின் அழுவான்; தூங்கிப் போவான்.

Ø  நடராஜ அய்யர் தமது 120 ஏக்கர் நிலத்தையும் 45 பள்ளக்குடிச் சனங்கள் குடும்பங்களுக்கும் குத்தகைக்கு கொடுத்துவிடுவார், வருத்தப்பட்ட கிட்ணசாம்பான் , எங்க தெருவில ஒரு பத்து பேருக்காவது கொஞ்சமாவது வயல் விட்ருக்கலாம்ல சாமி, நாங்க என்ன ஒழைக்கமாட்டமா? என்று கேட்பான்.  அப்போது நடராஜ அய்யர் அவனிடம்,  யாராவது உங்களை மிரட்டி  நிலைத்தைக் கேட்டால் என்ன செய்வாய்? என்று கேட்பார். அதற்கு , நிலத்தைக் கொடுத்துவிட்டு ஓடிப்போவோம் என்பான் கிட்ணசாம்பான். ஆனால் பள்ளக்குடிகள்  , " செத்தாலும் வயக்காட்டுக்குள்ளே சாவமே ஒழிய , சாமானியமா வயக்காட்டை விட்டிட்டு ஓடமாட்டோம்னு சொல்வார்கள்  " .


Ø  “நாவால் உதடு நக்கி உயிர்பிழைக்கக் கத்தியது சீனியின் வம்சம். புயலென பறந்து வந்தது கூகை. நீள் இறக்கைநீட்டி , கண்களை உருட்டிக் காவல் காத்தது கூகை. அத்தனை ஜீவராசிகளும் கூகையை விரட்டியடித்தன. மேலெல்லாம் காயம்பட்டு பயந்து , பறந்து பொந்துக்குள் நுழைந்து கொண்டது கூகை. பதுங்கிப்பதுங்கி வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போயிற்று. பதுங்குதல் பாய்தலின் சூட்சுமம். அந்தத் தருணம் பார்த்துக் காத்திருந்தது கூகை”.

Ø  கூகை சகுனம்;
ஓருரை உரைக்குமாகில்  உற்றதோர் சாவு சொல்லும் .
ஈருரையுரைக்குமாகில் எண்ணிய கருமம் ஈடேறும்.
மூவுரையுரைக்குமாகில் மோகமாய் மங்கை சேர்வாள் .
நாலுரை உரைக்குமாகில் நாழியில் கலக்கம் வந்திரும்.
ஐயுரையுரைக்குமாகில் ஒரு பயணம் கிட்டும்.
ஆறரையுரைக்குமாகில் அடுத்தவர் வரவு கூறும்.
ஏழுரை யுரைக்குமாகில் இழந்த பொருள்கள் மேலும்.
எண்முறை யுரைக்குமாகில் திட்டென சாவு நேரும்.
ஒன்பதும் பத்தும் உத்தமம்  மிக நன்று.

Ø  இருகால் நீட்டி அடுப்பெரித்துக் கொண்டிருந்தாள் முத்தையாப் பாண்டியனின் மூத்தமகள் ராமலட்சுமி. கால்கள் பற்றி எரியும் அனல் தகிப்பில் சுகமாய் லயத்திருந்தான் சீனியின் மகன் கோவிந்தன். வெந்து தணிந்து கொண்டிருந்தான்.

Ø  தன்னை சக்கிலியன் என்று சொன்னதும் தனக்கு மட்டும் ஓலை வெட்டி  வந்து பட்டை பிடித்துக் கொடுத்துக் காப்பி ஊற்றியதை நினைத்து சிரித்துக்கொண்டான் அப்புசுப்பன். இதைப் போலத்தானே மற்ற ஜாதிக்காரர்களும் நம்மை நடத்துவார்கள் என்று நினைத்த போது   அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

Ø  அத்தனை உடமைகளையும் இழந்து, மானத்தை மட்டுமே சுமையேற்றி நடந்தார்கள் சக்கிலிய சனங்கள்.

Ø  ஜாதிவிட்டு ஜாதி போய்ட்டானு ஏஞ் ஜாதியும் என்னைய ஒதுக்கிருச்சு , புள்ள குட்டிய விட்டிட்டு கீச்சாதிக் காரியக் கூட்டிட்டுப் போய்ட்டார்னு அவரு ஜாதியும் என்னைய ஒதுக்கிருச்சு(முத்துப்பேச்சி).

Ø  போலீசு, என்னைய  நெற அம்மணமா நிறுத்தி , அவங்களையும் அம்மணமா நிறுத்தி ஒங்க சின்னாத்தா கிட்டப் போங்கடான்னான் . எங்க மூணு பேத்தையும் ஒரே ரூமுக்குள்ளே இருட்டுக்குள்ளே விட்டுப் பூட்டிட்டான் .

Ø  பேச்சி,  எட்டையபுரம் ஊருக்குள் நுழைந்தாள். அருள் கெட்டுப்போய் சுவர்களில் செடிகள் முளைத்து விப்போடி, எப்போதும் விழுந்து விடலாம் என்று நிற்கும் அரண்மனையை நின்று பார்த்தாள். தசைவழி இறங்கி சதை தொட்டு அல்குல்களுக்குள் பதுங்கி பஸ்பமாகிப் போன அதிகாரத்தின் மிச்சசொச்ச அடையாளங்களே இந்த அரண்மனைகள்.

Ø  ஜமீனைப் பகைத்துக் கொண்டு வாழ்வது முடியுமா? தன மனசுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் களவாடிச் சரசமாடி அதிகாரம் புண்ணியத்தில் தெய்வமாகிப் போன பெண்கள் ஏராளம்!.

Ø  " களவாணிப் பயலைப் போயிப் புடிங்கனு சொன்னா , களவாணிப்பயக்கூட போலீஸ் சேக்காளியா ஆயிரான். போலீஸ் கூட ஜமீன்பய சேர்ந்திருக்கிறான் . ஜமீன்கூட காவாலிப் பயகலும் ,கள்ளவாலிப் பயகலும் முடிச்சுமாரி மொள்ளமாரிப் பயகலும் சேர்ந்துக்கிட்டு ஊருக்குள்ளே என்னமா ஆட்டம் போடுறான் பார்த்தியா. நானும் நீயும் என்ன செய்ய முடியுது . ஒன்னும் செய்ய முடியல , கூகையைப் போலப் பேசாமக் கண்ணை மூடிட்டு இருந்துட்டு என்னத்தையாவது தின்னு வயித்த நெறைச்சிட்டுப் படுத்து ஓரங்க வேண்டியது  தான்".

இப்படி பல்வேறு ரசிக்கும்படியான , சுவாரசியமான தகவல்கள் நாவல் நெடுகிலும் பரவியிருக்கின்றன.


நாவலின் சிறப்பு:


Ø  இந்த நாவல் 1960 க்கு முந்தய காலகட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக எழுதப்பட்டிருப்பதால் சாதியின் பிடியையும் அடையாளத்தையும் அப்படியே படம்பிடித்துள்ளது.

Ø  ஒடுக்கப்பட்ட மக்களான பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர் இவர்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமையையும் , ஏற்படும் வேற்றுமைகளையும் பேசுகிறது .

Ø  பள்ளர் சமூகத்தினரின் வீரத்தையும் , அவர்களது  விவசாய அறிவையும் ,  அவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்பதையும் படம் பிடித்துக்காட்டுகிறார் நூலின் ஆசிரியர்..

Ø  ஒடுக்கப்பட்ட பெண்களின் மீதான பாலியியல் மீறல்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ø  ஆதிக்க சாதியினரில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை நடராஜ அய்யர், காளித்தேவர் மற்றும் ராமையா பிள்ளை போன்ற பாத்திரங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார் சோ.தர்மன்.

Ø  ஜமீன்களின் பொருளாதார வளர்ச்சியையும் , சுரண்டலையும் மற்றும் சூழ்ச்சியையும்  தெளிவாகக் காட்டுகிறது.

Ø  முதலாளிகளின் மில்களிலும், கல்குவாரிகளிலும் உறிஞ்சப்படும் ஏழைகளின் அவலம் பேசு பொருளாளாக வந்திருக்கிறது.

Ø  பள்ளர் இனமக்களின் குணங்களை ஒப்பீடு செய்து அவர்களை கூகையின் குணத்தோடு பொருந்துகிறார் நூலாசிரியர்.

Ø  போலீசின் செயல்பாடுகளையும்  , எக்காலத்திற்கும்  பொருந்தும் அவர்களின் குரூரத்தையையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

நாவலின் பலவீனங்கள்:

இந்நாவலை வாசிக்கும் போது,  அதன் வேகத்தை குறைக்கும் சில பகுதிகளும் உண்டு. குறிப்பாக ;

Ø  சில இடங்களில் கூகையை பற்றிய மிகைப்படுத்துதல் அதிகமாக இருக்கிறது.

Ø  கிறித்துவ ஆராதனைகளை விவரிக்கும் பக்கங்கள் 207 முதல் 212 வரையிலான செய்திகள்  அலுப்பைத் தருகிறது.

Ø  இந்த  நாவல் , சீனி கூகைச்சாமியை தூக்கு கொண்டு சித்திரம்பட்டியை விட்டு வெளியேறும் வரை , அதாவது 236 பக்கம் வரை ஒரு பாகமாகவும் , 237 முதல் 319 வரை இரண்டாம் பாகமாகவும் எழுதப்பட்டுள்ளது.   அதில் 239  முதல் 251  வரை சீனிக்கிழவனின் மரணம் பற்றிச் சொல்கிறது. அதில் சீனி கூத்தாடி மன்னரை சந்திப்பதாகவும் , மோகனவல்லியால் கொல்லப்படுவதாகவும் வருகிறது.  இப்பகுதியில் நூல் ஆசிரியர் சோ.தருமன் அரசியல் நுழைவு செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அப்பகுதி  மிகவும் குழப்பமாக இருக்கிறது. அப்பகுதியை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இறுதியாக சோ.தர்மன் நாவலை இப்படி முடிக்கிறார்; 

 “பட்டிக்காட்ல நாங்க இருந்தப்போ எங்க கையில மம்பட்டியும் களைவெட்டியும், கோடாலியும், பண்ணருவாளும், கடகாப் பெட்டியும் இருந்துச்சு, ஒங்க கையில காடு, தோட்டம், வயக்காடு அம்புட்டும் இருந்துச்சு, நாங்க  ஒழச்சு ஓடாப்போனது தான் மிச்சம். டவுணுக்குப் போய் பொழச்சிகிறலாம்னு ஊர விட்டு வெளியேறிப் போனா  , எங்க கையில சாந்துச்சட்டியும், தார்ச்சட்டியும், ஜல்லி ஒடைக்க சுத்தியலும், சம்மட்டியும் , மூட தூக்குற கொக்கியும் கெடச்சுது, உங்க கைல தீப்பெட்டிக் கம்பெனி, ஜின்னிங் பேக்டரி, காண்ட்ராக்டு,  மெடிக்கல் , ஆஸ்பத்திரி, பைனான்ஸ், கல் குவாரி, மணல் குவாரி, ஆட்டுச் சந்தை, மாட்டுச்சந்தை , பஸ் ஸ்டாண்டு எல்லாம் இருந்துச்சு , இதை எல்லாத்தையும் விட்டுட்டு சீரழிஞ்சது போதும்னு தெகைச்சு நிக்கும் போது, ஒவ்வொருத்தன் கிட்டயும் ஒரு  கையில  கட்சிக் கொடியையும், இன்னொரு கைல ப்ராந்தி பாட்டிலயும் திணிச்சுட்டீக, அதிகாரம் ஒங்க கைல, நாங்க கூகையைப் போல பயந்து, ஒளிஞ்சு, பதுங்கி ...அடக்கடவுளே உனக்கு கண் இல்லையா ? இந்த வேகாரிப் பயகலுக்கு நல்ல புத்தி குடுக்க  மாட்டியா ? காலம் பூராவும் இப்பிடியா சீரழியனும் " என்று முத்துப்பேச்சி குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்”. அப்போது , தூரத்தில் நாலைந்து  சிறுவர்கள் செத்துப்போன கூகை ஒன்றினை ,  காலில் கயிறு கட்டி இழுத்துக் கொண்டே ஓடுவதை  முத்துப்பேச்சி பார்க்கிறாள்.

என் மனக் கண்களிலிருந்தும் கூகையும் , சீனிக்கிழவனும் மறைகிறார்கள். சோ.தர்மன் நினைவிற்குள் வருகிறார்.


சு.கருப்பையா
மதுரை
+919486102431



1 comment:

  1. எளிய மனிதர்களின் வாழ்க்கையும், அவர்களின் உளவியல் ரீதியான மனஉணர்வுகளையும் அழகாக காட்சிபடுத்திருக்கும் களமாக கூகை விளங்குகிறது. சூல் நாவலைப் போன்றே வேளாண் குடிகளைப்பற்றி கூகை பேசுகிறது.எளிய மனிதர்களையே பாடுபொருளாககொண்டு சிந்திப்பவர் நூலாசிரியர் அய்யா சோ.தருமன்.

    ReplyDelete