Sunday 17 February 2013

என் இலக்கிய நண்பர்கள் - நூல் அறிமுகம்

பிப்ரவரி 09, 2013 அன்று நடந்த வாசிப்போர் களம் கூட்டத்தில் தோழர் முனைவர். வா.நேரு அவர்களால், ந.முருகேச பாண்டியன் அவர்கள் எழுதிய ”என் இலக்கிய நண்பர்கள்” என்ற நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு இலக்கிய ஆளுமைகளுடன் ஆசிரியருக்குண்டான அறிமுகம் மற்றும் நட்பைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். நூலின் முன்னுரையில் நட்பின் மேன்மை பற்றியும், உயிருக்குயிரான சிநேகம் என்று நம்பியவர்களில் சிலர் காலவெளியில் காணாமல் போனது பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர். இந்நூலில் சமகால இலக்கிய நண்பர்களைப் பற்றிய தனது கருத்தையும், விமர்சனத்தையும் முன்வைக்கும் போது ஏற்படும் தர்மசங்கடங்களைத் தான் அறிந்து இருப்பதாகவும், தன் நண்பர்களை நட்பையும், விமர்சனத்தையும் பிரித்துணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எழுத்தாளர் பிரபஞ்சனைப் பற்றிக் கூறும் போது, பெரியவர்களுடனான தனது நட்பை வைத்து பிழைப்பு தேடிக் கொள்ளத்தெரியாத வெள்ளந்தியானவர் என்றும் தன்னை சந்திக்க வருபவர் எந்த இலக்கிய அறிவுமின்றி ஏதாவது உரையாடிக் கொண்டிருந்தாலும், அவர் மனம் நோகக் கூடாது என்பதற்காக பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார். அவரது படைப்புகளில் விரியும் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. பிரபல சிறுகதை ஆசிரியர் என்ற பிம்பத்தை தனக்குள் ஏற்றிக் கொள்ளாமல எப்போதும் வேடிக்கையுடனும் கேலியுடனுமே வாழ்வை எதிர் கொள்பவர். வாழ்வின் சகல சூத்திரங்களையும் தந்திரங்களையும் கூட அறிந்திருந்தாலும் அவற்றை பிரயோகிக்க அக்கறையற்று புதிய தளங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறார் பிரபஞ்சன் என்றும் விளக்கியுள்ளார்.

தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையான நகுலன் பற்றியும் இறுதிக்காலத்தில் அவரது தனிமை பற்றியும், குடும்ப அமைப்பில் சிக்கிக் கொண்டு ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப் பற்றிய அவரது பார்வை பற்றியும் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார். அவரது இறுதி நாட்களில் மரணம் குறித்து அவர் கொண்டிருந்த பயத்தைப் பற்றியும், நினைவு தவறிய பின் ஏற்கனவே அறிமுகமானவர்களை அடையாளம் காண அவர் பட்ட சிரமங்களைப் பற்றியும் கூறியுள்ளார்.

நாடக ஆசிரியர் மு.ராமசாமி அவர்களைக் குறிப்பிடும் போது, இளவயதிலிருந்தே நவீன நாடகங்களில் தீவிர ஈடுபாடு உடையவர் என்றும், ஆனால் தான் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட பிற்கு அவரது செயல் தீவிரம் குறைந்து விட்டது என்றும், இன்று பத்தோடு ஒன்றாக ஒரு துணை நடிகரைப் போல ஆகி விட்டார் என்றும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எழுத்தாள இரட்டையர்கள் பிரேம்-ரமேஷ் அவர்களைப் பற்றி, இடைவிடாத உரையாடல்களால் மனம் கவர்ந்தவர்கள் என்றும், போலி கவுரவத்திற்கு மரியாதை தராதவர்கள் என்றும் சிறுபத்திரிக்கை உலகின் உள்ளரசியலைத் தாண்டிய வெளிப்படையான மனிதர்கள் என்றும் கூறியுள்ளார்.

கவிஞர் கலாபிரியா, ஒரு காலத்தில் அவர் மீதிருந்த பிரமிப்பு கால ஓட்டத்தில் அவரது சமரச சூழ்நிலையால் அடிபட்டுப் போயிற்று என்று கூறியுள்ளார். குற்றாலத்தில் தொடர்ச்சியாக அவர் நடத்தி வந்த இலக்கிய நிகழ்வான “பதிவுகள்” மூலம் அவர்களுக்குள்  வேர்விட்ட நட்பு இன்றும் தொடர்வதாகவும், கலாப்ரியாவுடனான நட்பு என்றும் தனக்கு பெருமிதம் தருவதாகவும் கூறியுள்ளார்.

எழுத்தில் கடினத்தை வருத்தி வரவழைக்கும் கோணங்கி அவர்கள் பற்றியும், இயல்பான குடும்ப சூழ்நிலை மட்டுமன்றி மொத்த குடும்பமும் விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் பண்புடைய வண்னநிலவனின் தன்னடக்கம் பற்றியும் தனித்தனி கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் பிரபஞ்சன், நகுலன், விக்ரமாதித்யன், பிரேம்-ரமேஷ், மு.ராமசாமி, கலாப்ரியா, ராஜமார்த்தாண்டன், கோணங்கி, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, மணா, அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ப.சிங்காரம், கந்தர்வன் என்று பதினைந்து இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் அவர்களின் இலக்கிய செயல்பாடுகள், படைப்புகள் பற்றியும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாக அமைந்துள்ளது இந்நூல்.

நூல்: என் இலக்கிய நண்பர்கள்
ஆசிரியர்: ந.முருகேச பாண்டியன்
வெளியீடு: உயிமை பதிப்பகம்
விலை: ரூ 70. பக்கம்: 120.

நூல் அறிமுகம் முனைவர் வா.நேரு.

தொகுப்பு: வி.பாலகுமார்.

No comments:

Post a Comment