Wednesday 23 October 2019

அசுரன் திரைப்படம்-ஒரு பார்வை.


அசுரன்  திரைப்படம்-ஒரு பார்வை.










சில வருடங்களுக்கு முன்பு பூமணியின் "வெக்கை" நாவலை படித்த போது, அவர்  எடுத்துக்  கொண்டிருந்த கதைக்களம் மிகவும் ஈர்ப்பாக இருந்தது. ஒரு பதினைந்து வயது பையனான சிதம்பரம்  தனது அண்ணனைக் கொன்ற வடக்கூரானை பழி தீர்த்துவிட்டு தந்தையுடன் காட்டிற்குள் தலை மறைவாகி பிறகு  நீதிமனறத்தில் சரணடைய போகும் வரையிலான நிகழ்வினை  அந்த நாவல் பேசுகிறது. நாவலை வாசித்தபோது பூமணியின் கரிசல் காட்டு நடை மிகவும் சுவாரசியமாகத் தான் இருந்தது. நான் ஒரே மூச்சில் படித்து முடித்த சில நாவல்களில் இதுவும் ஒன்று.

அந்த நாவல் இப்போது வெற்றி மாறனின்  படைப்பில் " அசுரன் " என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்து மிகவும் நல்ல படம் என்று பேசப்படுகிறது; மிகப் பெரிய பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனாலும், வெற்றிமாறன் ஒரு பேட்டியில் " வெக்கை " நாவலை படித்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காது என்று அடக்கமாக கூறியிருக்கிறார். இதுவே , இப்படத்தைப் பார்க்க என்னைத் தூண்டியது. ஆனால், நாவலின் பிம்பத்தை என் மனத்திலிருந்து ஒதுக்கி விட்டே  படத்தை  பார்த்தேன்.

முதல் பாதியில் அப்பா சிவசாமியும், மகன் சிதம்பரமும் காட்டிற்குள் ஒளிந்து திரிவதை மிக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் வெற்றி மாறன். அவர்களுடன் நாமும் சேர்ந்து பயணிப்பதாகவே  தோன்றுகிறது. அற்புதமான  படப்பிடிப்பு. அதுவும் இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி  மிகவும் உயிரோட்டமாக இருந்தது. ( பாராட்டுக்கள் பீட்டர் கெய்ன்) பிரமாதம்!. படம் இடைவேளை வரை மிக வேகமாக நகருகிறது.



இரண்டாம் பகுதி சிவசாமியின் கடந்த கால நிகழ்வினை வெளிக்கொணருகிறது. இப்பகுதி நாவலில் இடம்பெறவில்லை . வெற்றிமாறனால் படத்தின் வெற்றிக்காக இணைக்கப்பட்ட பகுதி இது. உண்மையைக் கூற வேண்டுமானால் வெற்றிமாறன் இங்கே தான் வெற்றி பெறுகிறார். அதுவும் சிவசாமி , தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாரியம்மாளுக்கு "செருப்பு" வாங்கி கொடுப்பதும் . அதை அணிந்து  பள்ளிக்குச் கொண்டுசென்ற அவளை ஆதிக்கசாதியினர்  அடித்து அதே செருப்பை தலையில் சுமக்க வைத்து அவமானப்படுத்துவதும் அன்றைய காலத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் வெக்கையை வெளிக்காட்டியது. அதனால் அவமானத்தால் கூனிக்குருகிப் போன மாரியம்மாள் , இக்கொடுமையை யாரும் தட்டிக்கேட்கவில்லை என்று உடைந்து அழும்போது நெஞ்சம் கனத்துப்போகிறது.

அதேபோல்  பஞ்சமி நிலம்மீட்பு பற்றிய போராட்டத்தையும் , அதையொட்டி ஏற்படும் கலவரத்தின் அடையாளமாக  கீழவெண்மணியில் "ராமையாவின் குடிசையில் " 44  பேர்கள் எரிக்கப்பட்டு இறந்த சம்பவத்தையும் மிகப் பொருத்தமாக இணைத்திருக்கிறார் வெற்றிமாறன். இருந்தாலும் இப்பகுதியின் நீளம் எனக்கு   சற்று சலிப்பை கொடுத்தது உண்மை தான்  . ஆனால் இறுதிப்பகுதி மீண்டும் வேகத்தை கூட்டுகிறது.

உண்மையைக் கூறவேண்டுமென்றால் அடங்கி ஒடுங்கிக் கிடந்த தாழ்ந்த சாதியினர் , ஆதிக்க சாதியினருக்கு எதிராக வெகுண்டெழுந்து அடிக்கு அடி என்று இறங்குவது தான் சரி என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகிறது. மேலும் காட்சிகளை துவேசம் இல்லாமல் இயல்பாக எடுத்திருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.

தனுஜின் நடிப்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது . அதுவும் மூத்த மகனைக் காப்பாற்ற  ஊர் பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு ஒவ்வொருவரின் காலில் விழும் போதும். சின்ன மகனைக் காப்பாற்ற கண்களில் கனல்தெறிக்க போராடும் போதும் நடிப்பின் உச்சம் தொடுகிறார். தனுஷ்  , சிவசாமியாகவே வாழ்ந்திருக்கிறார். இப்படத்தை பார்த்தபிறகு அவர் மீது எனக்கிருந்த எதிர்மறையான   பிம்பங்கள் மறைந்து அவரை மிக உயர்வான இடத்திற்கு கொண்டு சென்றது.



அவரது மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜேய் அருணாசலம் போலீசாரின் அடியால் உருக்குலைந்து வந்த நிலையிலும் , தந்தை தனுஷ்  வாந்தியெடுப்பதை கையில் ஏந்திச் செல்லும் காட்சியில்  நமக்கும் இப்படியொரு மகன் கிடைக்க வேண்டும் என்று ஏங்கச் செய்யும் விதமாக நடித்திருப்பது உண்மை. அதே போல் சின்ன மகனாக வரும் கென்  கருணாஸின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர் காலம் காத்திருக்கிறது.


இறுதி காட்சியில்  சிதம்பரத்திடம் , " நிலம் இருந்தால் புடுங்கி கிடுவாங்க ; பணம் இருந்தால் புடுங்கி கிடுவாங்க; ஆனால் படிப்பு இருந்தால் அவர்களால் புடுங்க முடியாது" என்று சிவசாமி கூறும் இடம் படத்தின் சிகரமாக இருக்கிறது. தனுஷ் கொலைப்பழியை தான் ஏற்று கொண்டு நீதிமன்றத்தில் சரணடையும் அந்தக்காட்சி.........

மொத்தத்தில் " அசுரன்" ஒரு அற்புதமான படைப்பு. இயக்குனர் வெற்றிமாறனுக்கும் அவரது குழுவிற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.



இப்படத்தின் மூலம் "பூமணி"  என்ற படைப்பாளனுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.  அவர் தன்னுடைய " வெக்கை" நாவலின் முன்னுரையில் "கொலை செய்தது என்னவோ சிதம்பரம் தான்; ஆனால் காட்டில் அலைந்து திரிந்தது நான் தான்" என்று எழுதியிருப்பார். அது எவ்வளவு உயர்ந்த வரிகள் என்பதை  இப்படத்தைப் பார்த்தபிறகு தான்  புரிந்து கொள்ள முடிந்தது.



 “அசுரன் எல்லோரையும் கொள்ளை கொள்கிறான்”.

1 comment:

  1. Asuran...A fantastic picture shows the conditions of SC people.Actors are not acting in that film but they lived as their role...It is the OPT film for the time being..Except Education,any money,place will be occupied by power,rich people..This is the high valuable theme....Anna your comments are very admirable.

    ReplyDelete