Tuesday 25 December 2018

கீழவெண்மணி துயரத்தை வெளிக்கொணரும் நூல்கள்.

வரலாற்றில் மிகப் பெரிய துயரத்தை சுமந்து கொண்டிருக்கும் கிராமம் இது. கீழவெண்மணி என்ற பெயரைக் கேட்டவுடன் நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது , துடிக்கத் துடிக்க 20 பெண்கள் ,  19 குழந்தைகள், 5 முதியவர்கள் என 44 தாழ்த்தப்படட மக்களை அதுவும் விவசாயக் கூலிகளை,  ஒரு குடிசையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தான் நம்  நினைவிற்கு வரும்.


அந்த நாள் 25-12-1968. இரவு 08.30 மணி,

ஆம் , உலக மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடும் அதே நாள்.


கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலிகள்,  கூலியாக, அரைப்படி*** நெல் அதிகம் கேட்டதற்காக,  44 உயிர்கள் கொளுத்தப்பட்ட அந்தச் சம்பவம்  நாட்டையே உலுக்கியது. இந்தக் கொடிய செயலைச் செய்தவன் நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராக இருந்த இரிஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார்  கோபால கிருஷ்ண நாயுடு. ஆனாலும் நீதிமன்றத்தால் பண்ணை அல்லது ஆண்டை என்று அழைக்கப்படட அந்த கோபால கிருஷ்ண நாயுடு குற்றவாளி இல்லை எனக்கூறி விடுதலை செய்யப்பட்டான்.


அந்தக் கூலிப் போராட்டத்திற்கு உறுதுணையாகவும்  , வழிநடத்தியும் சென்றவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள் தான். குறிப்பாக  அப்போதைய தலைவர் தோழர். சீனிவாச ராவ்  தலைமையில் பல தோழர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்நிகழ்வைப் பற்றி தமிழில் மூன்று நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. அவையாவன;


1.       குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி ( 1969 ஆம் ஆண்டு ).
2.       செந்நெல்        - சோலை சுந்தரப்பெருமாள் (1999 ஆம் ஆண்டு ).
3.       கீழைத்தீ           - பாட்டாளி.( 2007 ஆம் ஆண்டு ).





இதில் இந்திரா பார்த்தசாரதி தமது குருதிப்புனல் நாவலில் கோபாலகிருஷ்ண நாயுடுவை, கன்னய்யாநாயுடு என்ற பாத்திரத்தில் ஒரு ஆண்மையற்றவனாக சித்தரித்திருப்பார். அதை மறைப்பதற்காக பலபெண்களைக் கெடுத்தது போலவும் , பங்கஜம் என்ற பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பது போலவும் சித்தரித்திருப்பார். இதனால் இந்நாவல்  விவசாயிகளின் கூலிப் போராடடத்தை  திசைதிருப்பி கொச்சைப்படுத்தி விட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது குறிப்பாக  இடது சாரிகள் இந்நாவலை ஏற்றுக்கொள்ளவில்லை. 


காரணம், கோபாலகிருஷ்ணநாயுடு உண்மையாகவே  பெண்பித்தன்; பல கூலிபெண்களை சீரழித்தவன், அவனது பாலியியல் கொடுமை என்பது    இரிஞ்சூர்  , கீவளூர் , தேவூர்  மற்றும் கீழவெண்மணி  கிராமங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களான பள்ளர் மற்றும் பறையர் இன மக்களால் சகித்துக்கொள்ளமுடியாதாக இருந்தது. அதனால் குருதிபுனலுக்கு விமர்சனம் எழுந்தது ஆச்சரியமில்லை தான். ஆனால் , இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் கோபாலகிருஷ்ணநாயுடு உயிரோடு இருந்தார்; அதனால்,  அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் " ஆண்மையற்றவனாக" சித்தரித்தேன் என்று இந்திராபார்த்தசாரதி குறிப்பிடுகிறார். மேலும் , தனது நாவலில் வரும் பாத்திரங்களைச் செதுக்குவதில் அந்த எழுத்தாளனுக்கு முழு  சுதந்திரம் உள்ளது. இருந்தாலும் , கீழவெண்மணி கூலிப் போராட்டத்தையும் , அதன் தளத்தையும் இந்நாவல் கொச்சைப்படுத்தவில்லை என்றே  கருதுகிறேன். இந்நாவலுக்கு சாகித்திய அகாடமி பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் ,  சோலைசுந்தரபெருமாளின் செந்நெல் நாவல் கீழ்வெண்மணியைப்பற்றி மிக ஆழமாக பேசுகிறது. படைப்பாளி அந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலம். இதில் , கோபாலகிருஷ்ணநாயுடுவை நேரடி பாத்திரமாகவே கொடுத்திருக்கிறார். அவரது , பாலியியல் மீறல்களையும் பதிவு செய்திருக்கிறார். இந்த நாவலை வாசிக்கும் போது அந்த வயல்வெளிகளில் நாமும் வாழ்வது போன்ற உணர்வு எழும் என்பது உண்மை. கீழவெண்மணி பண்ணையார் வேலுநாடார் , அவரது பண்ணையாள் பெரியான், அவனது மகன்கள் ரெங்கசாமி , கண்ணுச்சாமி மற்றும் அவனது குடும்பத்தினரின் பாத்திரப்படைப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். எப்போதும்  கூலி தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும்  வேலுநாடாரை கோபாலகிருஷ்ணநாயுடு மிரட்டி தனது வழிக்கு வரவழைப்பதும் , அதன் விளைவாக கீழ்வெண்மணியில்  அமைதி குலைவதும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார் சோலைசுந்தரபெருமாள்.


அத்தோடு , கீழ்வெண்மணியில் வாழ்ந்த பள்ளர் , பறையர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களிடையே (கூலித் தொழிலாளிகளுக்கிடையில் ) இருந்த ஒற்றுமையையும் இந்த நாவல் பேசுகிறது. இறுதியில் கோபாலகிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் , ராமையாவின் குடிசைக்கு தீ வைத்து கொளுத்தி அங்கே ஒளிந்திருந்த  44 பேர்கள் மரணிக்கும் அவலக்குரலோடு நாவல்  முடிகிறது. சோலை சுந்தரபெருமாள் , கீழ்வெண்மணிப் போராட்டத்தை அதன் துவக்கத்திலிருந்து இராமையாவின் குடிசை எரிப்புவரை திசை மாறாமல் எழுதியிருப்பது  இந்தநாவலின் சிறப்பு. மேலும்   கீழ வெண்மணிப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பினை வடிவேலு பாத்திரத்தின் மூலம்  மிக ஆழமாக வெளிக்கொணர்ந்திருப்பார்.


அடுத்து பாட்டாளியின் கீழைத்தீ!!!


இந்நாவல் , வெண்மணி எரிப்பு படுகொலைக்குப் பிந்தைய நிலையில் ஏற்பட்டப் போராட்டங்களையும் , கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்பு வரையிலான நிகழ்வுகளை பற்றி பேசுகிறது.

நாவலில்  சன்னாசித் தாத்தாவின் கதைகளும் , வெங்கிட்டன் -ஜோதி இவர்களின் சாதி கடந்த காதலும் , வயல்வெளிகளும் , புரட்சிகர அரசியலும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. அத்தோடு , கோபாலகிருஷ்ணநாயுடுவின் பாலியியல் வன்முறைகள் மற்றும் வக்கிரகங்களை அப்பட்ட்டமாக  எடுத்து கூறியிருப்பார் பாட்டாளி. அவரது கல்லு வீடும் , வில்லு வண்டியும் ஏராளமான பாவங்களுக்கு அடையாளமாக இருக்கிறது. கோபாலகிருஷ்ணநாயுடு,  44 பேர்கள் எரிப்பிற்குப்பிறகும் திருந்தவில்லை என்பதே அவரது கொலைக்கு வித்திடுகிறது.   நாவலில் வரும்  இடதுசாரி தோழர்கள் ஜோசப் ராஜா, ஆரோக்கியராஜ், ரவிக்குமார் , திருநாவுக்கரசு மற்றும் ஏகேடி போன்றவர்களின் பாத்திரங்களை திறம்பட கையாண்டிருப்பார் பாட்டாளி. இறுதியில்   வரும் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புத் திட்டமும் , கொலையும் நம் மனதில் அழுத்தமாக பதிகிறது.


ஆம்!

வெண்மணி துயரத்திற்கு மூலகாரணமாக இருந்த கோபாலகிருஷ்ணநாயுடு  24 இடங்களில் வெட்டப்பட்டு, 14-12-1980 ந் தேதி கொல்லப்பட்டு பழிதீர்க்கப்படுகிறார்.  இந்தக் கொலையில் முதல் குற்றவாளியாக நந்தன் இருக்கிறான். இவனே , கீழ்வெண்மணியில் ராமையாவின் குடிசையில் எரிந்து போன அந்த 44 பேர்களின் அவலக் குரலை நேரில் கேட்ட சாட்சி . அப்போது அவனுக்கு வயது 11.    நந்தனின் மனம் அன்று அமைதியடைகிறது.

கோபாலகிருஷ்ணநாயுடு  கொலையுண்டதால் , கீழவெண்மணி முழுக்க மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது, மக்கள் நரகாசுரன் ஒழிந்தான் என்று பாயாசம் செய்து மகிழ்ந்தார்கள் என்றும்,  கோபாலகிருஷ்ணநாயுடுவின் அழித்தொழித்தல் நிகழ்வே தமிழகத்தில் இடதுசாரிகள் (எம் எல்) நடத்திய கடைசி நிகழ்வு என்று பதிவு செய்து நாவலை முடிக்கிறார் பாட்டாளி.


  
இந்த மூன்று நாவல்களும் குறிப்பிடும் தளமானது  உழைப்பு ; கூலி , போராட்டம் மற்றும் கம்யூனிசம் தான்.  


என்னைப் பொறுத்தவரை வெண்மணி படுகொலையை  கூலியை உயர்த்திக்  கேட்டதால் நடந்த நிகழ்வாக மட்டும் பார்க்க முடியவில்லை . அதற்கான மூலகாரணங்களாக,  அங்கே வாழ்ந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமை, அவர்கள் பண்ணைகளை எதிர்த்து கேள்வி கேட்டது., அவர்களுக்கு எதிராக அணி திரண்டது மற்றும்  அரசியல் விழிப்புணர்வு போன்றவைகள் தான்  பண்ணைகளுக்கு கோபத்தையும் கூடவே பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் எதிர்விளைவே "வெண்மணி படுகொலைகள்".


ஆனாலும் , அன்று விவசாயம் இருந்தது; பண்ணைகள் இருந்தது ; ஆடு மாடுகள் இருந்தது!  அன்று விவசாயக்கூலிகள் மட்டும் அடிமைப்படுத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள் ; கம்யூனிஸ்ட்கள் போராடினார்கள். உண்மையில், வெண்மணிப்போராட்டம் தான் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழகத்தில் அதன் தேவையை நியாயப்படுத்தியது.  அதனால் டிசம்பர் 25 ஆம் நாள் கிறித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட்களுக்கும்  புனிதமான நாள் தான் என்று பத்திரிக்கையாளர் மைதிலி சிவராமன் கூறியது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.



ஆனால் இன்று ?

நம் நாட்டில் ( தமிழ் நாடு உட்பட ) விவசாயம் அழிகிறது; விவசாயிகள் தற்கொலைகள் செய்கிறார்கள். சாதித்தீ பரவுகிறது. காதலர்கள் கொல்லப்படுகிறார்கள்; ஆணவக்கொலைகள் அதிகரிக்கின்றன. கிராமங்கள் அழிகிறது. ஆனாலும் .... மக்களும் , அரசியல் வாதிகளும் அதை கடந்து செல்கிறார்கள். அதனால், இந்த நாவல்கள்  கொடுக்கும் படிப்பினையை நாம் தவறவிடுகிறோம் என்றே தோன்றுகிறது.


சு. கருப்பையா



No comments:

Post a Comment