Wednesday 21 August 2013

நிழல்தரா மரம்-நாவல்







நிழல்தரா மரம்
அருணன்
வசந்தம் வெளியீட்டகம்
நவம்பர் 2003
பக்கம் 320; விலை ரூ.100

இந்த நாவலை  வாசித்திருந்த என் நண்பர்,  நூலாசிரியர் தோழர் அருணன் வரலாற்றுக்கு முரணாக எழுதி இருப்பதாக  மிகவும் வருத்தப்பட்டார். நானும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன். ஆர்வம் மேலோங்க எனக்கு அந்த நூலை வாசிப்பதற்கு கொடுக்குமாறு கேட்ட பொழுது , அவரிடம் அந்த நூல் இல்லை என்றும், நூலகத்தில் திரும்பச் செலுத்தி விட்டதாக கூறிவிட்டார்.  வழக்கம்போல் நண்பர் புத்தகத்தூதரை **(சடகோபன்) அணுகி ,  எனக்கு " நிழல்தரா மரம்" உடனே வேண்டும் என்று பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்.  அவர் மதுரையில் உள்ள அத்தனை புத்தக நிலையங்களை சலித்து எடுத்து ஒரு பிரதியை கொண்டு வந்துவிட்டார்.

நாவலை நான் வாசித்து  முடித்தபொழுது காலை 0300 மணி.   முப்பத்தி ஆறு  ஆண்டுகளுக்கு முன்பு கல்கியின் "சிவகாமியின் சபதம்"  என்ற நாவலைத் தான் இப்படி வாசித்திருந்தேன். அடுத்த நாள் முழுவதும் என் மனதில் வஞ்சகத்தால் உயிர் இழந்த 8000 சமணர்கள் தான் உலா வந்தனர். அவர்களை கழுவேற்றிய பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் என்ற கூன் பாண்டியனை என்னால் மன்னிக்க முடியவில்லை. அதற்கு உடந்தையாக இருந்த அமைச்சர்  குலச்சிறையார் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்கள் அந்தக் கொலைக்கு உடைந்தையாக இருந்தவர்களாகவே எனக்குத் தென்பட்டார்கள்.

நாவலில் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் நேர்மையாக வாதிட்ட சமணர்கள் தோல்வி அடைந்த வரலாற்றை  நம்பும்படியாக  எழுதி இருந்தார் அருணன். இருந்தாலும் , சமணர்களை கொன்றதற்கு பழி வாங்கவே திருஞானசம்பந்தர், அவரின் திருமணத்தின் போது, சமணர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டதாக எழுதி இருந்தது சரியா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இதற்கான விடையும்  மதுரைஆதினத்தின் வலைத் தலத்தில் கிடைத்தது.  இதோ அந்த செய்தி.





ஆக, திருஞான சம்பந்தர் திருமணத்தின் போது மனைவியுடன் " பெருஞ் ஜோதியில் "  கலந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்  தான் , சமணர்கள் மூட்டிய தீயாக அருணன் பதிவு செய்துள்ளார் . அவ்வளவே!.

இந்த நாவல்  , சைவச் சித்தாந்தத்தில்  ஊறித் திளைத்து போன என் நண்பருக்கு பிடிக்காமல் போனதில்  உண்மையிலே ஆச்சரியமில்லை தான்இந்த நூல் அருணன் கூறியது போல்  கழு மரத்தில் சமணர்கள் சிந்திய ரத்தத்தில் முகிழ்த்த நாவல் தான். அதுமட்டுமல்ல, மதுரையின் மறக்க முடியாத " இரத்தச் சுவடும் கூட". 

சு.கருப்பையா. 
www.manthanalam@gmail.com 

** 
புத்தகதூதன்
( புத்தகக்கடை : 10% தள்ளுபடி உண்டு )
14, ஆத்திகுளம் சாலை
செல்வம் ஸ்டோர் எதிரில்
ரிசர்வ் லைன், மதுரை-14
MOB: +919443362300

2 comments: